Tuesday, June 5, 2012

நீங்களும் நாளைக்கு தாத்தா - பாட்டி தான்!


பள்ளி விடுமுறைக்கு தாத்தா, பாட்டி வீட்டுக்கு போகிறோம் என்று சொன்னாலே குழந்தைகள் குதூகலம் ஆகிவிடுவார்கள். காரணம் அதிகப்படியான பாசத்தை தாத்தா வீட்டில் தான் காணமுடியும்.

இப்படிப்பட்ட அன்புக்குரிய எல்லா தாத்தா, பாட்டிகளின் மேன்மையையும் உணர்த்துவதற்காகவும், உணர்வதற்காகவும் அனுசரிக்கப்படும் தினம் - அக்டோபர் 1: உலக முதியோர்கள் தினம்.

கடந்த 1982-ம் ஆண்டில் ஐ.நா. அமைப்பால் உருவாக்கப்பட்ட கமிட்டியின் மூலம் முதியோர்களின் தேவைகள், அவர்களின் பங்களிப்பு மற்றும் அவர்களை பாதுகாப்பது போன்றவை தொடர்பாக ஆராயப்பட்டு 1990-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி இனி உலக முதியோர்கள் தினம் என பிரகடனப்படுத்தியது.

முதியோர்களை பாதுகாப்பதில் இந்தியர்கள் அதிக கவனம் செலுத்துபவர்கள். நமது கூட்டுக் குடும்ப கலாசாரத்தைப் பார்த்து அந்நியர்கள் ஆச்சரியப்பட்டார்கள். படிப்பதற்காக, சுற்றுலாவுக்காக என இந்தியா வரும் அயல்நாட்டவர்கள், இந்தியர்கள் உறவுகளோடு ஒன்றாக வாழ்வதை பார்த்து இங்கே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவதையும் பார்த்திருக்கிறோம்.

அத்தனை பெருமைக்குறிய இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில்தான் பத்து மாதம் சுமந்து பெற்ற தாயையும் கஷ்டப்பட்டு வளர்த்த தந்தையையும் வீட்டில் வைத்து பராமரிக்க முடியாமல் ரோட்டுக்கு அனுப்பும் அவலமும் நடக்கிறது.

அதேபோல், பெற்றோர்களை பாதுகாக்காத பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம் உருவாக்கும் அளவுக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டது.

ஏன் இந்த நிலை?

திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கும் பெண் வீட்டார் முதலில் போடும் கண்டிஷன், 'கல்யாணத்துக்கு அப்பறம் பொண்ணும் மாப்பிள்ளையும் தனிக் குடித்தனம் வைச்சுடணும்' என்பது தான். பிரச்னையே இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. 'அத்தனை வருடங்கள் வளர்த்து ஆளாக்கும் பெத்தவங்களை விட்டுட்டு நாங்க மட்டும் புகுந்த வீட்டுக்கு வர்றோம்.. ஏன் நீங்க வந்தா என்ன தப்பு?' என புரியாமல் பேசும் பெண்களை என்னவென்று சொல்வது.

தனக்கும் அப்பா, அம்மா இருக்கிறார்கள் அவர்களின் நிலை என்ன ஆகும் என நினைத்து பார்ப்பதில்லை. பருவ வயதிலிருந்து ஓட ஆரம்பித்து திருமணம், குழந்தைகள் வளர்ப்பு, அவர்களது படிப்பு, திருமணம் என அனைத்து கடமைகளும் முடித்துவிட்டு நிம்மதியாக கடைசி காலத்தை பெத்த பிள்ளைகள், அவர்களின் பேரக்குழந்தைகளுடன் கழிக்கலாம் என நினைக்கும் பல முதியவர்களின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போடும் பிள்ளைகள் தான் இங்கே இருக்கிறார்கள்.

இன்றைய தலைமுறையினர் தங்கள் குழந்தைக்கு பள்ளிப் போக, மற்ற விஷயங்களை கற்றுத்தர இன்டர்நெட் போதும் என நினைக்கின்றனர். தொழில்நுட்பத்தை கற்றுத்தரும் இணையதளம் கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் போன்றவற்றை கற்றுத் தராது. ஆனால், வீட்டில் முதியவர்கள் இருந்தால் ஒவ்வொரு விஷயத்திலும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். குழந்தைகளை மட்டுமல்ல உங்களையும் வழிநடத்தும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.

வயதாக ஆக முதியவர்களின் உடல் மற்றும் மனதும் குழந்தைப் பருவம் போன்று ஆகிவிடும். இதையே 'செகண்ட் சைல்ட்வுட்' என்பார் ஷேக்ஸ்பியர். எனவே தான் முதியவர்கள் சக குழந்தைகளுடன் மிக அன்பாக பழகுகின்றனர்.

பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய முதியவர்களை வீட்டில் வைத்து பாதுகாப்பது நமது முக்கிய கடமை. நீங்களும் ஒருநாள் தாத்தா பாட்டி ஆவீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இனியாவது சிந்திப்பீர்களா?

சரி இனி பேருந்தில் நின்று கொண்டு வரும் முதியவர்களுக்காவது இடம் கொடுப்பீர்கள் தானே?
- பானுமதி அருணாசலம்
நன்றி : ஆனந்த விகடன்
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls